திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகள் திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரமாண்டமான குதிரையின் கீழ் அம்மன் காட்சியளிக்கிறார். அம்மன் முகத்தில் இரண்டு வைர மூக்குத்திகள் இருந்தன. பூஜையின் போது தீபாராதனை வெளிச்சத்தில் வைர மூக்குத்திகள் மின்னி பக்தர்களை பரவசத்திற்குள்ளாக்கும்.
நேற்று முன்தினம் இரவு பச்சை துண்டை முகத்தில் மறைத்து வந்த நபர் அம்மன் மூக்குத்திகளை கழட்டி குதிரையின் கால்கள் வழியாக வெளியேறியுள்ளார். நேற்று காலை பூஜாரிகள் பூஜை செய்த போது தான் திருட்டு நடந்தது தெரிந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு பேர் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் திருட்டுச்சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் 30 நிமிடத்திற்கும் மேலாக அந்த நபர் உலா வந்துள்ளார். பாதுகாவலர்கள் அதை அறியவில்லை.
கோயில் நிர்வாகம் தரப்பில் திருடு போனது வைர மூக்குத்தி கிடையாது. ஏ.டி.,கல் எனப்படும் வைரத்திற்கு அடுத்தபடியான கல் என தெரிவிக்கப்பட்டது.
பக்தர்கள் கூறியதாவது: பகலில் கோயில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் பக்தர்களை அலைக்கழிப்பது, அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவு காவலர்கள் பணியில் இருப்பதில்லை. தூங்கவும் செய்கின்றனர் என்றனர். மர்மநபர் திருடும் வீடியோ வைரலாகியும் வருகிறது.