வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''அரசு பணத்தை நாலு வருஷமா கையாடல் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அநியாயமா இருக்கே... எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
![]()
|
''சென்னை பேசின் பிரிட்ஜ் பகிங்காம் கால்வாய் பக்கத்துல, நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்துல, 300 கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கா... இந்தக் கடைகளுக்கான வாடகை பணத்தை, அரசின் கணக்குல கட்டாம, நாலு வருஷமா சிலர் பாக்கெட்டுல போட்டுக்கறா ஓய்...
''இதனால, பல கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு வராம போயிடுத்து... இது சம்பந்தமா, நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் போயும், அவா எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...
''இதனால, இந்த முறைகேடுல பெரிய அதிகாரிகளுக்கும் பங்கு இருக்குமோன்னு சந்தேகம் வரது... 'அ.தி.மு.க., ஆட்சி துவங்கி, தி.மு.க., ஆட்சியிலயும் தொடர்ந்துட்டு இருக்கற இந்த முறைகேடு பத்தி, முறையா விசாரணை நடத்தினா, நிறைய திமிங்கலங்கள் சிக்கும்'னு, நேர்மையான ஊழியர்கள் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
'திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி இருக்கும் பா...'' எனக் கேட்டபடியே வந்தார், அன்வர்பாய்.
''அந்த மாதிரி இக்கட்டான நிலையில இருக்கிறது யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''வேலுார் மாவட்டம், காட்பாடியை தலைமை இடமா வச்சு, 2017ல, 'இன்டர்நேஷனல் பைனான்ஷியல் சர்வீஸ்' அப்படிங்கிற, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தை சிலர் துவங்கினாங்க... இதுல, 1 லட்சம் ரூபாய் டிபாசிட் செஞ்சா, மாசம், 6,000 ரூபாய் வட்டி தர்றதா சொல்லி, முதலீடுகளை திரட்டினாங்க பா...
''ஆரம்பத்துல சொன்னபடி, மாசம், 6,000 ரூபாய் வட்டியை கரெக்டா குடுத்ததால, மக்கள் சாரை சாரையா வந்து, நிறுவனத்துல பணத்தை கொட்டினாங்க... இப்படி, 6,000 கோடி ரூபாய் வரை வசூலிச்ச நிதி நிறுவன உரிமையாளர்கள், போன வருஷம் நிறுவனத்தை மூடிட்டு, தலைமறைவாயிட்டாங்க பா...
''இந்த நிறுவனத்துல,மத்திய - மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் பலரும் கோடிக்கணக்குல முதலீடு பண்ணியிருக்காங்க... ஆனா, அதிகபட்சம், 5 லட்சம் வரைக்கும் முதலீடு செஞ்சவங்க தான், போலீஸ்ல புகார் குடுத்திருக்காங்க...
''கோடிக்கணக்குல முதலீடு செஞ்சவங்க புகார் குடுத்தா, அவ்வளவு பணம் எங்க இருந்து வந்துச்சுன்னு, வருமான வரித் துறை கேள்வி கேட்கும்கிறதால, கமுக்கமா இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பயிற்சியாளர் பணிக்கு வசூல் வேட்டை நடக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்புல தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்யப் போறாவ... எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல்னு படிப்படியா தேர்வு நடக்கு வே...
![]()
|
''எழுத்துத் தேர்வுல வெற்றி பெற்றவங்களிடம், வேலை வாங்கி தர்றதா சொல்லி, 8 லட்சம் ரூபாய் வரைக்கும் சிலர் வசூல் பண்ணுதாவ...
''இது, துறையின் அமைச்சர் உதயநிதிக்கு தெரிஞ்சு நடக்கா, இல்லையான்னு தெரியல... 'அவர் தலையிட்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உத்தரவு போடணும்'னு தேர்வுல கலந்துக்கிட்டவங்க சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.