கோவை;கோவை மாவட்டத்தில், 9 லட்சத்து, 12 ஆயிரத்து, 783 வீடுகளுக்கு, குழாய் மூலமாக காஸ் வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் பணியை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேற்கொள்கிறது.
இதற்காக, நகர்ப்பகுதியில் வீதிகளுக்குள் வீட்டு இணைப்பு வழங்க குழாய் இணைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு அனுமதி கேட்டு, மாநகராட்சியில் விண்ணப்பித்திருக்கிறது.
24 மணி நேர குடிநீர் திட்டத்தில், சூயஸ் நிறுவனம் குழி தோண்டியதாலும், பாதாள சாக்கடை திட்டத்துக்கு மாநகராட்சி தோண்டியதாலும் மாநகர பகுதிகளில் ஏராளமான வீதிகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க, ஆங்காங்கே ரோடு போடும் பணியை, மாநகராட்சி துவக்கியிருக்கிறது.
இச்சூழலில், காஸ் குழாய் பதிக்க மீண்டும் ரோட்டை தோண்டினால், மக்களிடமும், கவுன்சிலர்கள் மத்தியிலும் கடுமையான அதிருப்தி ஏற்படும் என்பதால், அனுமதி கொடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. அதனால், மாற்று ஏற்பாடாக, சூயஸ் நிறுவனம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டும் பகுதியில், காஸ் குழாய் பதிக்க அனுமதி தந்தால், ஒரே நேரத்தில் இரு வேலைகளையும் முடித்து விடலாம் என, இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பை நேரில் சந்தித்து, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 30 கி.மீ., துாரத்துக்கு பகுதி பகுதியாக அனுமதி தர, கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் கூறியதாவது:
குறிச்சி, 97வது வார்டில், 30 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. டைடல் பார்க்கில் இருந்து சேரன் மாநகர் வரை, 5 கி.மீ., துாரத்துக்கு காஸ் குழாய் பதித்து, இப்போது தார் ரோடு போடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் தற்போது புதிதாக ரோடு போட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன், காஸ் குழாய் பதித்தால் மீண்டும் தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. மாநகராட்சி அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு, கூறினர்.