விருதுநகர் : விருதுநகரில் நகராட்சி ரோட்டில் நடப்பட்ட புதிய மின்கம்பங்களால் ஆக்கிரமிப்புக்கு வழி ஏற்பட்டுள்ளதால் ரோடு குறுக வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
விருதுநகரில் மெயின் பஜார், தேசப்பந்து மைதானம், மதுரை ரோடு, கச்சேரி ரோடு, தெப்பம் என பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன.
இதனால் மக்கள் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எந்த ஒரு வணிக கட்டடத்திற்குமே வாகனம் நிறுத்தும் வசதி இல்லை. கடைகள், வணிக கட்டடங்கள் முன்பு தான் வாகனங்களை நிறுத்த வேண்டி உள்ளது. அவை பெரும்பாலும் ரோட்டில் இருப்பதாலும் ரோட்டில் அளவு குறுகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி உள்ளது.
தற்போது விருதுநகர் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக வணிக கட்டட பணி நடந்து வருகிறது.
அதன் முன் பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் மின்கம்பங்கள் ஆக்கிரமித்து நடப்பட்டுள்ளன.
வழக்கமாக மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டின் ஓரமாக தான் நடப்படும்.
இது ரோட்டின் விளிம்பில் இருந்து 3 அடி தள்ளி வந்து ரோட்டில் நடப்பட்டுள்ளதால் பாதை குறுகி உள்ளது. இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும்.
ஏற்கனவே மின்கம்பம் உள்ள நிலையில் மின்வாரியம் எப்படி ரோட்டில் இது போன்று ஆக்கிரமிப்புக்கு வழிவகை செய்யும் வகையில் மின்கம்பங்களை நடலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை உடனடியாக அகற்றி போக்குவரத்து இடையூறை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.