நாமக்கல்,-ரேஷன் அரிசி, கலப்பட டீசல் கடத்துவதை தடுக்க நாமக்கல்லில் தீவிர வாகன சோதனை நடந்தது.
தமிழக அரசு வழங்கும் பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்ணெண்ணய் கடத்தப்படுவதாக புகார் வந்தது. அதே போல் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சோதனைசாவடிகளிலும் மற்ற எல்லைப்பகுதிகளிலும், எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு அனுப்பினர். ஆவணமின்றி ரேஷன் அரிசி எடுத்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். வரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.