சோழவந்தான் : செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூரை பெயர்ந்து, சுகாதார வசதியின்றி உள்ளது.
இம்மருத்துவமனையில் கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இரவில் தங்கும் வசதி இருந்தும் யாரும் தங்குவதில்லை.
அடிக்கடி மின்தடையால் மாதம் ஒருமுறை பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சுகாதாரமற்ற சூழலில், இடத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கட்டடத்தின் வெளிப்பக்க சுவர்கள் விரிசலடைந்து புதர் மண்டி கிடக்கிறது. பாம்பு உள்பட விஷபூச்சிகளின் நடமாட்டத்தால் நோயாளிகளும் பணியாளர்களும் அச்சத்துடனே உள்ளனர்.
அப்பகுதி நோயாளி ஆண்டி கூறியதாவது:
நாற்பதாண்டுக்கு முன் கட்டிய இம்மருத்துவமனையில், கூரை பெயர்ந்து, விரிசலடைந்துள்ளது. மழைநீர் கசிந்து அறைகளில் தேங்குகிறது.
மருந்துகள் வைப்பறை, இரத்த பரிசோதனை அறை, மருத்துவர் அறைகளில் சுவர்கள் ஈரமாகி விரிசலடைந்தது. இங்கு சுகாதாரம் பெற வந்தால் சுகாதாரமே இல்லாமல் நிலையம் செயல்படுகிறது.
இங்கு பொது நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதியில்லை. இரண்டு மருத்துவர் பணியிடத்தில் ஒருவரே உள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துக் கிடக்கிறோம், என்றார்.
பொன்னி கூறியதாவது: இங்கு அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் தொலைவில் இருந்து வரும் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் முதலுதவி சிகிச்சைக்கு வரமுடிவதில்லை.
சித்தமருத்துவ பிரிவு, 108 அறை முன்பு போதை ஆசாமிகளால் அச்சம் ஏற்படுகிறது.
இரவில் பாதுகாப்பான சூழல் இல்லாததால், தங்குவதற்கு செவிலியர் வருவதில்லை. சுற்றுச்சுவர், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை வேண்டும், என்றார்.