உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கியும், புதிய கட்டடத்திற்கு எந்த முயற்சியும் எடுக்காததால்,தபால் நிலையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
உசிலம்பட்டி தபால் நிலையத்திற்கு சொந்தமாக கட்டடம் வேண்டும் என்ற நோக்கத்தில் சந்தை திடலுக்குள் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இடம் வாங்கினர். தபால் துறை சார்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகபுதிய கட்டடம் கட்டப்படுவதாக இருந்தது. அடுத்தடுத்து வந்த எம்.பி.,க்களும் கட்டடம் கட்டுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுஉள்ளனர்.
இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக தபால் நிலையம் வாடகைக்கு இடம் கிடைக்காமல் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாறிவிட்டது. இத்தனை அவதிப்பட்டும் ஏனோ தபால் நிலையத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என்ற எண்ணமே அதிகாரிகளுக்கு எழாமல் போய்விட்டது. இனியாவது தபால் துறை அதிகாரிகள் புதிய கட்டடம் கட்டும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும்.