திருப்பூர்,-அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 30 பேர், போதை பிடியிலிருந்து மீண்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் வினீத் கூறியதாவது: அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனை, ஏற்கனவே 670 படுக்கை வசதி; புதிய கட்டடத்தில், 500 படுக்கை
வசதி என, மொத்தம் 1,170 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும், 700 முதல் 750 உள்நோயாளிகள்; இரண்டாயிரம் முதல் 2500 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
போதை தடுப்பு பிரிவில், எட்டு பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்; கடந்த மாதம் மட்டும், 30 பேர், குணமடைந்துள்ளனர். ஆதரவற்ற மனநல பிரிவில், 22 பேர் சிகிச்சை பெறும்நிலையில், எட்டு பேர், குணமடைந்து காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.