புதுச்சேரி : புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் நேற்று நடந்தது.
தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, நிதித்துறைச் செயலர் ராஜி, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் திட்டத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்குமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்குத் தேவையான 100 ஏக்கர் நிலத்தை தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக எஸ்.டி.பி.ஐ., நிறுவனத்திற்கு 33 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்க புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
தகவல் தொகுப்பு மையம்,தொழில்பயிற்சி மையம், புதிய தொழில் அமைப்புகள், திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 6 ஏக்கர் நிலப்பரப்பில் அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கி 6 மாதத்தில் நிறைவு செய்திட வேண்டும். அதற்கு தேவையான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து விரைவாக கேட்டுப் பெற வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிப் பணிகள் புதுச்சேரி மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். மேலும் திறன்சார் சுற்றுலாவுக்கு வழிவகுக்கும். ஆகவே அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மீன்பிடித் துறைமுகம் அமைத்தல் போன்ற வளர்ச்சி பணிகளை கவனம் செலுத்த வேண்டும். கடலோரப் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கவும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் கடல்வாழ் உயிரினங்களின் காட்சியகம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் அரங்கம், கடல் மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தினார்.