புதுச்சேரி : நில அபகரிப்பு ஆய்வு குழுவுக்கு உரிய அதிகாரம் தரப்படும் என கலெக்டர் மணிகண்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
மக்கள் பிரதிநிதிகள் அளித்த 16 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளித்த பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் அவர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த வாரத்திற்குள் தகவல் தரப்படும்.
நில அபகரிப்பு தொடர்பாக பல புகார்கள் வருகிறது. இதுகுறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தேவையான அதிகாரம் வழங்கப்படும். பொதுமக்கள் புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். முதியோர், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முதியோர், குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் காற்று வசதி, ஏர்கூலர் வசதி செய்து தரப்படும்.
சாலை சந்திப்புகளில் பேனர் வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உள்ளாட்சித்துறையுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் புதுச்சேரியில் பேனர்கள் அனைத்தும் அகற்றப்படும். தெருநாய் தொல்லையை தடுக்க உள்ளாட்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை நிகழ்வை பள்ளி மாணவர்கள் பார்க்க சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.சட்டசபையில் மக்கள் பிரச்னைகள் எப்படி விவாதிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள தினசரி 10 மாணவர்கள் சட்டசபைக்கு அழைத்து செல்லப்படுவர்.
புதுச்சேரியில் உள்ள 70க்கும் மேற்பட்ட காப்பகம், ஆதரவற்றோர் காப்பகத்தினரிடம் ஆலோசனை நடத்தி, அங்குள்ளோரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். இவற்றை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.700 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. அதில், ரூ.300 கோடி மதிப்புள்ள பணிகள் முடியும் நிலையில் உள்ளது. 6 மாதத்தில் அதிக பணிகளை முடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார்.
கலெக்டர் மணிகண்டன் கூறும்போது மக்களை நோக்கி அதிகாரிகள் என்ற நோக்கில் முக்கிய அதிகாரிகள் பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் முகாம் நடத்த உள்ளோம். பொதுமக்களின் புகார்களை அங்கேயே தீர்வு காணப்படும். வரும் 15ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.மாதந்தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாமுடன், விவசாயிகள் குறை தீர்வு முகாம் இணைந்து நடத்தப்படும் என்றார்.