வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர் : ''ஜப்பானில் கோவில் கட்டுவதற்கு வேண்டிய உதவிகளை செய்வோம்,'' என, தருமபுர ஆதீனம், 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூரில், ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில், தருமபுர ஆதீனம், 27வது குருமகா சன்னிதானத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஜப்பானில், கடந்த, 1572ம் ஆண்டில் மிகப் பெரிய சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு, உலக நாடுகள் முழுதும் மேன்மை மிகு சைவ நெறி வளர்ந்திருந்தது. நம் ஆதீனங்கள் செய்யும் கோவில் கும்பாபிஷேகத்தை, ஜப்பான் நாட்டினர் அறிந்துள்ளனர்.
உலகம் முழுதும் சைவ சமயம் பரவ வேண்டும் என்பதே ஜப்பானியர் நோக்கம். வழிபாட்டு முறையில் தமிழ் மொழியும், ஜப்பான் மொழியும் ஒத்துப் போகிறது. அதை உணர்ந்து, தமிழகத்தில் பல கோவில்களில் வழிபாடு செய்யும் நோக்கத்தில், ஜப்பானியர்வருகின்றனர்.
மேலும், தமிழ்மொழியை அவர்கள் விரும்பி படிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் படிப்பதை, பல பிள்ளைகளின் பெற்றோர் குறைவாக மதிப்பிடுகின்றனர்.
'தமிழ் படித்தால் அரசு வேலை' என அறிவித்தால், தமிழை பலரும் படிப்பர். ஜப்பானில் கோவில் கட்ட உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும், சமய பிரசாரத்துக்கு தேவையான உதவிகளும் இங்கிருந்து செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், ஜப்பான் சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி என்ற தகாயுகி ஹோசி நன்றி தெரிவித்தார். அவருடன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 30 பேர் பங்கேற்றனர்.