சித்தாமூர்:சூணாம்பேடு அருகே, காவனுார் கிராமத்தில், சூணாம்பேடு - மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், சூணாம்பேடில் இருந்து மதுராந்தகம் செல்லும் சாலை மார்க்கத்தில், காவனுார் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே சாலை பழுதுஅடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆகையால், சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலையை சீரமைக்கும் 'பேட்ச் வொர்க்' நடந்தது. சீரமைக்கப்பட்ட மூன்றே மாதங்களில், சாலை மீண்டும் சேதமடைந்தது.
பழைய சாலையை அகற்றாமல், பழுதுஅடைந்த சாலையின் மீதே சீரமைக்கும் பணி நடைபெற்றதால், சாலை மீண்டும் சேதமடைந்ததாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மீண்டும் அதே இடத்தில், பழைய சாலையை அகற்றாமல், சீரமைக்கும் பணி நடந்தது. இதனால், அதேபோல் மீண்டும் சாலை சேதம்அடைந்தது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த சாலையை அகற்றி, முறையாக மீண்டும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த மாதம், நம் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, பழுதடைந்த பழைய சாலையை அகற்றிவிட்டு, 'பேட்ச் வொர்க்' செய்யப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.