திருப்புல்லாணி-திருப்புல்லாணியில் பேன், மிக்ஸி, கிரைண்டர்உள்ளிட்ட வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது பார்க்கும் பயிற்சியில் பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பெண்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 முதல் 45 வயதுள்ள பெண்கள், ஆண்களுக்கு நிகராக மின் விசிறிக்கானகாயில் சுற்றுதல், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுகளை உடனடியாக சரி செய்தல் குறித்து பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் மூலம் கற்றுக் கொள்கின்றனர்.
மண்டபம், திருப்புல்லாணி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 4 ஒன்றியங்களிலும், 67 சமுதாயத் திறன் பயிற்சிகளில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை உதவி இயக்குனர் பிரதீப், திறன் மேம்பாட்டு வேலை வாய்ப்பு அலுவலர் கிருத்திகா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது:
ஆண்களுக்கு நிகராகஎங்களாலும் வீட்டு உபயோக மின் சாதன பொருட்களை பழுது நீக்குவதற்கு கற்றுக் கொண்டுள்ளோம். 23 பேர் கொண்ட குழுவாக இயங்கி எங்கள் பகுதிகளில் மின் சாதன பொருட்களை பழுது நீக்க முடிவெடுத்துள்ளோம்.
இதனால் வீட்டில் இருக்கும் போது ஓய்வு நேரத்தில் பழுதுகளை சரி செய்வதன் மூலம் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டலாம், என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தொழிலை மேலும் விரிவுபடுத்த அரசு எங்களுக்கு வங்கி கடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.