நரிக்குடி, -நரிக்குடி ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணத்தின் (அ.தி.மு.க.,) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 பேரும், எதிராக ஒருவரும் வாக்களித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க., 6 , தி.மு.க., 6 , சுயே., 2 இடங்களை கைப்பற்றியது. இதில் தலைவர் பதவி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டது. சுயே., கவுன்சிலர் பஞ்சவர்ணத்தை அ.தி.மு.க., வினர் அக்கட்சியில் இணைத்தனர். மற்றொரு சுயே., கவுன்சிலர் தி.மு.க., விற்கு ஆதரவு அளித்தார். தலா 7 என சம எண்ணிக்கையில் இருந்ததால், குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றிய தலைவரானார். துணைத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். நரிக்குடி ஒன்றியம் அ.தி.மு.க., வசமானது.
இந்நிலையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக 8 மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து, கூட்டத்திற்கு வரவில்லை என 3 கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்ய தலைவர் நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின் நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கல்யாண குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 12 பேர், எதிராக ஒருவரும் வாக்களித்தனர். இதையடுத்து ஒன்றிய தலைவர் பதவி காலியானது. அ.தி.மு.க., கவுன்சிலர்களும் எதிராக வாக்களித்ததால் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.