காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மேற்கு மாட வீதியில், வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மின் இணைப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு மின் கம்பம், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்தது.
இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை கோவில் சுவரையொட்டி 'பார்க்கிங்' செய்து செல்கின்றனர்.
சாலையின் ஒரு பக்கம் மின் கம்பம் இடையூறு ஏற்படுத்தும் நிலையில், மற்றொரு பக்கம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
எனவே, இடையூறு மின் கம்பத்தை சாலையோரம் இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து மின்வாரியம் சார்பில், போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த பழைய இரும்பு மின் கம்பம் அகற்றப்பட்டு, சாலையோரம் புதிதாக சிமென்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.