காரியாபட்டி:போர்ச்சுக்கல்லை சேர்ந்த கேட்டியா ஒலிவேரா 29, விருதுநகர் கடம்பங்குளத்தை சேர்ந்த கார்த்திக்கை 34, ஹிந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கடம்பங்குளத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சங்கர் மகன் கார்த்திக். ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, லண்டனில் வேலை செய்கிறார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கேட்டியா ஒலிவேரா அறிமுகமானார்.
இந்திய கலாசாரத்தின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் இந்தியரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கேட்டியா ஒலிவேராவுக்கு இருந்தது.
கார்த்திக்கை பிடித்ததால் 8 ஆண்டுகளுக்கு முன் தன் காதலை கேட்டியா ஒலிவேரா தெரிவித்தார்.
இந்திய கலசாரத்தை தெரிந்து கொண்டு மாறினார். விநாயகரை கையில் பச்சை குத்தினார். நெற்றியில் பொட்டு வைத்து, சுவாமி கும்பிட்டு வந்தார். தங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
ஒலிவேரா தனது பெயரை மீனாட்சி என மாற்றினார். கார்த்திக் தந்த விநாயகர் சிலையை தினமும் வழிபட்டார்.
நேற்று காரியாபட்டி வலுக்கலொட்டியில் உள்ள பத்திரகாளி அம்மன், மாசான கருப்பசாமி கோயிலில் கார்த்திக், கேட்டியா ஒலிவேராவுக்கு மாலை மாற்றி, மந்திரம் ஓதி, தாலி கட்டி திருமணம் நடந்தது.
ஒலிவேரா என்ற மீனாட்சி கூறியதாவது:
இந்திய கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள கூட்டுக்குடும்பம், உறவினர்களுடன் வாழ்வது மகிழ்ச்சி. இந்தத் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என தினமும் சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன், நல்லபடியாக நடந்து முடிந்தது, மகிழ்ச்சி, என்றார்.
கார்த்திக், கூறுகையில். ஆரம்பத்தில் நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வருவாரா என தயக்கம் இருந்தது. முழுமையாக மாறினார். அவரது தாய் ,தந்தை அவரை சரிவர கவனித்துக் கொள்ளவில்லை. அதனால் பாசத்திற்கு ஏங்கினார்.
நமது கலாசாரப்படி கூட்டுக்குடும்பமாகவும், உறவினர்களோடு கடைசி வரை ஒன்றாக யாரையும் விட்டுக் கொடுக்காமல் வாழும் வாழ்க்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் அவர்தான் காதலை தெரிவித்தார், என்றார்.