'ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு 10 - 12 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. பா.ஜ., வளர்ச்சியை தடுக்க, காங்கிரஸ் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஈரோட்டில் பெற்ற வெற்றியை டில்லி வரை எடுத்துச் செல்ல வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி, 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார், இளங்கோவன். சென்னை வந்த அவர், நேற்று அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின், இளங்கோவன், அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட காங்., கோஷ்டி தலைவர்களுடன், முதல்வர் ஸ்டாலின், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியுள்ளதாவது:
சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மீது நம்பிக்கை வைத்து, மக்கள் ஓட்டு அளித்தனர்.
அவர்களுக்கு நாம் உண்மையாக இருந்து செயல்படுகிறோம் என்பதற்கு, இடைத்தேர்தல் வாயிலாக பாராட்டு சான்றிதழ் தந்துள்ளனர்.
ஆனால், நான்காண்டு காலம் முதல்வர் பதவி வகித்தபோதும், மக்களுக்கு துரும்பை கூட கிள்ளிப் போடாத பழனிசாமியை, மக்கள் நிராகரித்து விட்டனர். ஜெயலலிதா தலைமை இல்லாத அ.தி.மு.க.,வுக்கு, 10 முதல் 12 சதவீதம் வரை ஓட்டுகள் குறைந்துள்ளன.
இந்த ஓட்டுகளை, பா.ஜ., கபளீகரம் செய்து விடக் கூடாது என்பதில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஈரோடு வெற்றி பயணம், டில்லி செங்கோட்டை வரை தொடர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
தமிழக காங்., தலைவர் அழகிரி கூறுகையில், ''இளங்கோவன் வெற்றி, முதல்வரின் இரண்டாண்டு கால சிறந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ்,'' என்றார். இளங்கோவன் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு நடந்த அன்று, தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை என, அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு தெரிவித்தார். ஆனால், தோல்வி அடைந்த பின், முறைகேடு நடந்ததாக, பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை கூறுகிறார். ''இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என, நான் அன்று சொல்லியிருக்கலாம்; இன்று அப்படியில்லை. காலங்கள் மாறும்போது, கூட்டணிகள் மாறும்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்துக்களும் மாறும்,'' என்றார்.
- நமது நிருபர்- -