கோவை:கோவையில் உள்ள குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது மட்டுமே தீர்வாகாது. கழிவு நீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க, 'சர்வே' எடுத்து, ஏதேனும் ஒரு குளத்தில், 'பைலட்' திட்டமாக செயல்படுத்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தபோது, 'நொய்யல் ஆற்றின் நீர்வழித்தடம் சீரழிந்து கிடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளே, சாக்கடை கால்வாய் கட்டி, கழிவு நீரை நேரடியாக நீர் வழங்கு வாய்க்காலில் விடுகின்றன.
சிங்காநல்லுார் குளத்தில் கழிவு நீரே தேங்கியிருக்கிறது; இது, பாசன குளம். இக்குளத்தை துார்வாரி, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது' என, முறையிட்டனர்.
இதை, கலெக்டர் கிராந்திகுமார் குறிப்பெடுத்துக் கொண்டார்.
தினமும் ஏதேனும் ஒரு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யும் கலெக்டர், மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயல்படுத்துவதை பார்வையிட வாலாங்குளத்துக்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, 'ஸ்மார்ட் சிட்டி' மேலாளர் பாஸ்கரன், நகர பொறியாளர் (பொ) இளங்கோவன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர், வரைபடங்களுடன் விளக்கினர்.
'எந்தெந்த வழித்தடங்களில் குளத்தில் கழிவு நீர் கலக்கிறது' என, கலெக்டர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'குளக்கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுகிறோம்' என, மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்தனர்.
கலெக்டர் கூறுகையில், 'சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது மட்டுமே தீர்வாகாது. நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கக்கூடாது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறீர்கள்; அதற்கென சுத்திகரிப்பு நிலையம் கட்டியிருக்கிறீர்கள்.
அப்புறம் எதற்கு குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம்.மழை நீர் வடிகாலில் மழை நீர் மட்டும் தானே வர வேண்டும்; கழிவு நீர் கலக்க ஏன் விடுகிறீர்கள். கழிவு நீர் பாதைகளை கண்டறிந்து தடுங்கள். கழிவு நீரை, பாதாள சாக்கடையில் இணையுங்கள்.ஒவ்வொரு குளத்துக்கும் எந்தெந்த வழித்தடத்தில் கழிவு நீர் வருகிறது என 'சர்வே' எடுங்கள்.
'பைலட்' திட்டமாக ஏதேனும் ஒரு குளத்தில் கண்டறிந்து, கழிவு நீர் கலப்பதை தடுக்க முயற்சி செய்யுங்கள்' என, அறிவுறுத்தினார்.
அதன்பின், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதை பார்வையிட, கலெக்டரை அழைத்துச் செல்ல முயன்றனர்.
அதற்கு, '24 மணி நேர குடிநீர் திட்டம், உக்கடம் பெரிய குளத்தில் நீர் திரை காணொளி காட்சி அரங்கம், 'மொபிலிட்டி பிளான்' தொடர்பாக, ஒளிவுமறைவின்றி, அனைத்து தகவல்களையும் தெள்ளத்தெளிவாக, புரியும்படி, வெளிப்படையாக சொல்லக்கூடிய அதிகாரிகளை, கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.
'திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, கள ஆய்வுக்கு நேரில் வருகிறேன்' என, கலெக்டர் கூறிச்சென்றார்.
கலெக்டர் கிராந்திகுமார் மேலும் கூறுகையில், 'குளக்கரையை மேம்படுத்துவதோடு, தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதிகமான மக்கள் பயன்படுவதற்கான சூழலை உருவாக்கி, வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். குளக்கரையை முழுவதும் சுற்றி வரும் வகையில் 'சைக்கிளிங்' திட்டம் அமல்படுத்துங்கள். குளக்கரையில் மட்டும் சென்று வரும் வகையில், வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம்,'' என அறிவுரை வழங்கினார்.