ஆலாந்துறை:நல்லூர் வயலில் உள்ள காருண்யா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த, மரங்களை வெட்டி கடத்திய நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நல்லூர் வயலில், காருண்யா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த, 41 யூகலிப்டஸ் மரங்களை மர்ம நபர்கள், கடந்த மாதம் வெட்டி கடத்தி சென்றனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆலாந்துறை, சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜசேகரன்,39, புள்ளாக்கவுண்டன்புதூரை சேர்ந்த கவுதம், 27, பெருமாள் கோவில்பதியை சேர்ந்த ஆறுச்சாமி,47, பாலன்,47 ஆகிய நால்வரும் இணைந்து, மரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, காருண்யா நகர் போலீசார், நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து வெட்டி, கடத்தி சென்ற மரங்களையும் கைப்பற்றினர்.