தேனி- -வாழ்வில் அழியா செல்வத்தை தரும் புத்தகங்களை வாங்கி படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.' என அமைச்சர் பெரியசாமி பேசினார்.
தேனி பழனிச்செட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது. அமைச்சர் பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, புக் ஸ்டால்களை பார்வையிட்டார்.
அமைச்சர் பெரியசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது 12,255 ஊராட்சிகளிலும் நுாலகங்களை கொண்டுவந்தார். மாணவர்கள் புத்தகங்கள் படித்து சிறந்த எழுத்தாளர்களாக, கவிஞர்களாகவும், பிறதுறைகளில் முக்கியத்துவம் பெற வேண்டும். வாழ்வின் இறுதிவரை கல்விச்செல்வம் மட்டுமே அழியாமல் நம்முடன் வரும். அதனால் புத்தகங்கள் வாங்கி படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்.
முன்னதாக பேசிய கலெக்டர் ஷஜீவனா, இன்று துவங்கும் கண்காட்சி மார்ச் 12 வரை 10 நாட்கள் நடக்கிறது. 50 ஸ்டால்களில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள் பேச உள்ளனர். ரூ.500 க்கு புத்தகங்கள் வாங்குபவர்களை தினமும் மூன்று பேர் குலுக்கலில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். கோம்பை நாய் இனங்களை காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அரிய வகை நாய்களின் அணிவகுப்பு நடக்க உள்ளது. புத்தகத்தை வாசித்து விட்டு, பிறர் பயன் பெற புத்தக நன்கொடை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை சார்பில் சிறைவாசிகள் சீர்திருத்த நடவடிக்கையாக சிறை நுாலகத்திற்கு புத்தகங்களை வழங்கவும் 'ஸ்டால்' அமைக்கப்பட்டுள்ளன', என்றார். முன்னதாக பி.ஆர்.ஓ., ஜெகவீரபாண்டியன் வரவேற்றார். எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்க்ரே, மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.