உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில், பழைய தேர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் வீணாகும் அவல நிலை உள்ளது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழாவின் போது, சூலத்தேவருடன், தேரில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் உலா வரும் விழா, சிறப்பு பெற்றதாகும்.
பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழாவின் போது, 300 ஆண்டுகள் பழமையான, தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தேருக்கு பதிலாக, புதிதாக தேர் செய்யப்பட்டு, கடந்த பிப்., 23ல், புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.
மாரியம்மன் கோவில் பழைய தேர், மரத்தினால் செய்யப்பட்டு, பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 300 ஆண்டுகள் பழமையான தேராக இருந்தது.
இரு மாதத்திற்கு முன், புதிய தேர் நிலைக்கு கொண்டு வருவதற்காக, பழைய தேர், திருப்பூர் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தேரில் இருந்த, இரும்பு சக்கரங்கள் கழற்றப்பட்டு, பழைய தேருக்கு, கற்கள் அடுக்கி , நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய தேர் செய்யும் பணியை ஆய்வு செய்த, அறநிலையத்துறை அமைச்சர், பழைய தேரை பாதுகாப்பாகவும், எப்போதும் போல், எண்ணெய் காப்பு உள்ளிட்டவை மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.
நகராட்சி சார்பில், செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு, அங்கு பழமையான மாரியம்மன் கோவில் தேர், கண்காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எந்த பணியும் மேற்கொள்ளாமல், பழைய தேர் பராமரிப்பு இல்லாமலும், புதர் மண்டிய வளாகத்தில், வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி வருகிறது.
தேரின் பலகைகள்,கட்டைகள் விரிசல் விட்டும், பல இடங்களில் உடைந்தும் காணப்படுகிறது.
பழைய, கிழிந்த பச்சை நிற வலை கொண்டு மட்டும் தேர் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. முழுவதும் மரத்தினால் செய்யப்பட்டதும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், மரங்கள் காய்ந்து, வீணாகும் அவல நிலை உள்ளது.
எனவே, பழைய தேருக்குரிய, மரச்சக்கரங்களை பொருத்தவும், எண்ணெய் காப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளவும், கான்கிரீட் தளம் அமைத்து, மேற்கூரை அமைத்து, பழமையின் சின்னமாக உள்ள தேரை பாதுகாக்க வேண்டும்.
நகராட்சி அறிவித்தபடி, அறநிலையத்துறை வசம் இருந்து முறைப்படி, பழைய தேர் வாங்கவும், செம்மொழி பூங்கா அமைக்கவும், பாதுகாப்பாக கண்ணாடி கூண்டு அமைத்து, தேர் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.