ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் பணி செய்யாமல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும், 'ஏசி' விடுதியிலும், பண்ணை வீடுகளிலும் பதுங்கியதால், வாக்காளர்களுக்கு சென்றடைய வேண்டிய, 'கவனிப்பு'களை, உள்ளூர் நிர்வாகிகள் அபகரித்தனர். இதன் பின்னணியால் தான், தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி கடுமையாக சரிந்தது என, தெரியவந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 1.70 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இதில், 1 லட்சத்து, 10 ஆயிரத்து, 156 ஓட்டுகளை காங்., வேட்பாளர் இளங்கோவனும், 43 ஆயிரத்து, 923 ஓட்டுகளை அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசும் பெற்றனர்.
கடந்த, 2021ல், 1.52 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. அதில் காங்., திருமகன், 67 ஆயிரத்து, 300 ஓட்டுகளும், அ.தி.மு.க.,வின் யுவராஜா, 58 ஆயிரத்து, 396 ஓட்டுகளும் பெற்றனர். அந்த தேர்தலில் காங்., 8,904 ஓட்டுகளில் வெற்றி பெற்றது.

ஆனால், இம்முறை பதிவான ஓட்டில், 65 சதவீத ஓட்டை காங்கிரசும், 25.3 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க.,வும் பெற்றுள்ளன.
இதுபற்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் சம பலம் உடையவை. தேர்தல் பணியிலும் இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தான் இரு கட்சியிலும், வார்டு வாரியாகவும், ஓட்டுச்சாவடி வாரியாகவும் பணிகள் நடந்தன.
'துாக்கி' சுமந்தது
தி.மு.க.,வினர் இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர். அ.தி.மு.க.,வினர், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
தி.மு.க., சார்பில் எந்த திட்டத்தையும் இத்தொகுதியில் செயல்படுத்தவில்லை. காங்., வேட்பாளர் இளங்கோவன், கூட்டங்கள், வேன் பிரசாரம் மட்டுமே செய்தார். காங்., கட்சியினர் பிரசாரத்துக்கு வரவே இல்லை. அவர்களை, தி.மு.க.,வே 'துாக்கி' சுமந்தது.
ஆனால், அவர்களது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் கட்சி நிதி, சொந்த நிதியை கொட்டி பணிகளை செய்தனர்.
தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு, 3,000 ரூபாய், பட்டியில் அடைத்து பல நாட்களாக, 500 ரூபாய், பிரியாணி, புடவை, வெள்ளி கொலுசு என, அள்ளி வழங்கினர். இவ்வாறு, 95 சதவீதம் வாக்காளர்களை 'கவனிப்பு'கள் சென்றடைந்தன. அதுபோல, அ.தி.மு.க.,வினரும் வாக்காளர்களுக்கு, 2,000 ரூபாய், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு, பரிசு பொருட்கள், புடவை வழங்கினர். அவை, 40 சதவீதம் கூட வாக்காளர்களை சென்றடையவில்லை.
பெரும்பாலான வாக்காளருக்கு, 2,000 ரூபாய் பணம் கிடைக்கவில்லை. புடவையே தரமற்று காணப்பட்டன. முன்னாள் அமைச்சர்களில், உதயகுமார், செல்லுார் ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட மிகச் சிலர் மட்டுமே களத்தில் பணி செய்தனர். மற்றவர்கள் முழுமையான பணி செய்யவில்லை. அ.தி.மு.க.,வின் பெரும்பாலான மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி.,க்கள் வாக்காளர்களை சந்திக்கவே இல்லை.

சரிவை சந்திக்கும்
தி.மு.க., பணிமனைகளில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்தது போல, அ.தி.மு.க., 'மாஜி'க்கள் பலரும், 'ஏசி' விடுதியிலும், பண்ணை வீடுகளிலும் பதுங்கினர்.
தி.மு.க.,வில் பணம், நகை கொடுத்த நாட்களில், அதற்கான பொறுப்பாளர்கள், நேரடியாக குறிப்பிட்ட வாக்காளர்களிடம் பேசி, 'கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க' என, துவங்கி, 'எல்லாம் வந்ததா' என கேட்டும் உறுதி செய்தனர்.
அ.தி.மு.க., மாஜிக்கள், ஓட்டு பற்றியும், வாக்காளர்கள் பற்றியும் கவலைப்படாததால், அ.தி.மு.க., மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கட்சி கொடுத்த பணம், நிர்வாகிகளிடமே, 'வரவு' வைக்கப்பட்டு விட்டதால், காங்., வேட்பாளர், 66 ஆயிரத்து, 223 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.கடந்த தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனதற்கு, பா.ஜ., தான் காரணம் என நினைத்து, அவர்களை கூட்டணியில் சேர்க்காத நிலையிலும், கடந்த முறையை விட குறைந்த ஓட்டையே பெற்றுள்ளனர். இதை, பா.ஜ., சுட்டிக்காட்டி உள்ளது.
ஒரு தொகுதியில், 2.27 லட்சம் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, 40க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், 150க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களால் ஓட்டுகளை பெற முடியவில்லை.
வரும், 2024ல் எம்.பி., தேர்தலை எவ்வாறு சந்திப்போம் என்பதை, இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி சிந்திக்காவிட்டால், அ.தி.மு.க., அடுத்தடுத்த தேர்தல்களிலும் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இரண்டு மாதங்களில் பழனிசாமி பல அதிரடி முடிவுகளை எடுத்தார். இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக பெற்றார். தென்னரசை வேட்பாளராக நிறுத்தினார். பன்னீர் செல்வத்தை முற்றிலும் ஓரங்கட்டினார்.இச்சூழலில், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் இரு நாட்களாக, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர் தென்னரசு, வார்டு வாரியாக பொறுப்பை கவனித்த முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் பழனிசாமி விளக்கம் கேட்டுள்ளார்.அவர்களில் பெரும்பாலானவர்கள், உள்ளூர் நிர்வாகிகளையும், குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர்களையும் சாடி உள்ளனர். இதனால், விரைவில் கட்சி ரீதியாக களையெடுப்பு நடத்தி, பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்ட செயலர்களை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமிக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.