திருப்பூர்:தமிழகத்தில் தொழில் துறையை முடக்கும் விதமாக, வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற போலி 'வீடியோ'க்கள் பரப்பப்படுகின்றன. இந்த சதியை முறியடித்து, வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். தமிழகம் முழுதும் இவர்கள் பரவி இருந்தாலும், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
திருப்பூரில் ஜவுளித்துறை மற்றும் பிற தொழில்களில், 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில், 2 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர்.
பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., உட்பட, 21 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒற்றுமையாகவே வசித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கின் போது, கோவை, திருப்பூரில் முடங்கிய வடமாநில தொழிலாளருக்கு, அரசு சார்பில், அரிசி, பருப்பு, சமையல் மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் இருந்து, 1.42 லட்சம் தொழிலாளர், 5 கோடி ரூபாய் செலவில், சிறப்பு ரயில்களில், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்த அமைதியான சூழலில், வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் தொழிலாளர் மத்தியில் மோதல் ஏற்படுவது போன்றும், வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும் சர்ச்சை வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
போலி வீடியோ
திருப்பூரில் கடந்த ஜனவரியில், உள்ளூர் தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், உண்மையில் என்ன நடந்தது என போலீசார் விசாரித்து, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், வெளிமாநிலங்களில் நடந்த, தொடர்பே இல்லாத தாக்குதல் வீடியோக்கள், தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதல் நடப்பது போன்று, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவுகின்றன.
இதனால், பீஹார், ஒடிசா, உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில் வீண் பதற்றம் உருவாகியுள்ளது.
தொழில் துறை முடங்கும்?
தமிழகத்தில், கட்டுமானம், ஜவுளித் துறை உள்ளிட்ட பல்வேறு உடலுழைப்பு தொழில்களில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
வதந்தி தகவல்களை நம்பி, அவர்கள் வெளியேறும் பட்சத்தில் தேவையற்ற பதற்றம் உருவாகும். ஆட்கள் பற்றாக்குறையால், தமிழகத்தின் தொழில்துறை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, தமிழகத்தில், அனைத்து மாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.
'அச்சுறுத்தல் இல்லை'
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிக்கை:
வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும், தமிழக அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப் படுகிறது.
தமிழகத்துக்கு வருவோரை, நேசக்கரத்துடன் வரவேற்பது தான், தமிழ் மக்களின் பண்பாடு. உடல் உழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை, தமிழக அரசு நன்கு உணர்ந்து உள்ளது.
இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், தமிழகத்தில் சில இடங்களில் தாக்கப்படுவதாக, விஷமத்தனமான செய்தி, சமூக வலைதளங்களில் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில், எந்தவிதமான உண்மையும் இல்லை. வதந்தி பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில், வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல; எல்லா மாநிலத் தொழிலாளர்களும், எவ்வித அச்சமும் இன்றி, அமைதியாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு துவக்கம்
வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு, போலீசார் சார்பில் மேற்கு மண்டலத்தில் துவங்கப்பட்டுஉள்ளது.
பீஹார், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டு உள்ளனர்.
சில நாட்களுக்கு முன், கோவை, திருப்பூரில், பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், 'வீடியோ'க்கள் வெளியாகின.
அவை போலி என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு மறுத்த நிலையில், தமிழகம் முழுதும் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க, அனைத்து எஸ்.பி.,க்கள் - கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், பணிபுரியும் இடங்களில், கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர் கட்டுப்பாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்புகளை, ஸ்டேஷன் வாரியாக நேற்று முன்தினம் போலீசார் தொடங்கி உள்ளனர்.
ஸ்டேஷன் போலீசார் மட்டுமின்றி, உளவுத்துறை, 'கியூ' பிரிவு உள்ளிட்ட உளவு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன.
மேலும், வட மாநில தொழிலாளர்களின் ஆதார், வாக்காளர் அட்டை போன்றவற்றின் நகல்களை போலீசார் கேட்டு பெற்று, ஆவணமாக பராமரிக்க தொடங்கி உள்ளனர்.
திட்டமிட்ட சதி?
திருப்பூர் பனியன் தொழிலில், வடமாநில தொழிலாளர் பாதுகாப்புடன் பணியாற்றலாம்; எவ்வித இடையூறும் ஏற்படாது. 'வாட்ஸ் ஆப்' மூலமாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். திருப்பூரின் வளர்ச்சியில், வடமாநில தொழிலாளர் பங்களிப்பு முக்கியம். ஏற்றுமதியாளர்கள் எப்போதும், வட மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்போம். இதுபோன்ற வதந்தியை பரப்பி, இந்தியாவில் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டு சதி நடக்கிறது. எதையும் நம்பாமல், வடமாநில தொழிலாளர்கள், வழக்கம் போல் திருப்பூரில் அச்சமின்றி பணியாற்றலாம்.
சக்திவேல், தலைவர், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு.
உதவி மையம் அமைப்பு
திருப்பூரில், வடமாநில தொழிலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர். ஏதாவது பிரச்னை என்றால், தங்கள் நிறுவன மேலாளர்களிடம் தெரிவிக்கலாம். உதவி தேவையெனில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள உதவி மையத்தை அணுகலாம் என, தெரிவித்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தயாராக இருக்கிறது. வடமாநில தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், வதந்திகளை நம்பாதீர்கள் என, நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறோம்.
சுப்ரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.
தமிழக அரசு வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அரசு வீண் வதந்திகளை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.பிற மாநில தொழிலாளர்கள், தங்கள் பணியிடங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின், 1077 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில், மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட, 'புலம்பெயர் தொழிலாளர் குறை களைவு குழு' அமைக்கப்பட்டு உள்ளது.அந்தந்த மாவட்டங்களில், மாநகர போலீஸ், எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் செயல்படும் தொழில் பாதுகாப்பு பிரிவில் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.
பொய்யான 'வீடியோ'க்கள்
சமூக வலைதளங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்கள் வலம் வருகின்றன். இதனால் அச்சப்பட்டு தொழிலாளர்களாக சொந்த ஊர் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஓரிரு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிளம்பிவிட்டனர். பலர் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதாக கூறுகின்றனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்படும். மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பாதிப்படையும். சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை. வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ராஜ்குமார், தலைவர், இந்திய ஜவுளி கூட்டமைப்பு.