சேலம்-சேலத்தில் தேசிய புள்ளியியல் மண்டல துணை அலுவலகத்தில், 'இந்தியாவின் புள்ளியியல் ஆய்வு' குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நேற்று நடந்தது. மண்டல முதுநிலை புள்ளியியல் அலுவலர் அர்ஜூனன் தலைமை வகித்தார்.
சேலம் பொருளாதாரம், புள்ளியியல் துறை துணை இயக்குனர் கலைச்செல்வி பேசியதாவது: மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றம், நீர், நிலவளம், உற்பத்தி, விலை நிர்ணயம், மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், தொழிற்சாலை உற்பத்தி, கைத்தறி உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் புள்ளியியல் துறை ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி பணியாற்றி வருகிறது.
நாட்டின் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டமும் புள்ளியியல் துறை அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது. அதன் செயல்பாடு, வளர்ச்சி என, மக்கள் நலத்திட்டங்கள் உருவாக முக்கிய தரவாக புள்ளியியல் துறை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சேலம் அரசு கலைக்கல்லுாரி புள்ளியியல் துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் பேசினார். தேசிய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை செயல்பாடு குறித்து, வினாடி - வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் சந்தேகம், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. பெரியார் பல்கலை, சேலம் அரசு கலைக்கல்லுாரி உள்பட, நாமக்கல், தர்மபுரி மாவட்ட தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.