கரூர்,-''விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் அருகே, ராயனுாரில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, நேற்று மாலை பார்வையிட்ட, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 22 ஆயிரம் பயனாளிகளுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகளை நாளை (இன்று), விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வழங்குகிறார். மேலும், 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன் பின், கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ள, ஆய்வு கூட்டத்திலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.
கடந்த, 2021ல் சட்டசபை தேர்தலின்போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிபடி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரத்தில் இருந்து, 1,000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு, 200 யூனிட்டில் இருந்து, 300 யூனிட்டாகவும் உயர்த்தி, இன்று (நேற்று) முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட, 1,000 யூனிட் இலவச மின்சாரத்துக்கு ஆண்டுக்கு, 53 கோடியே, 68 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். அதேபோல், கைத்தறி நெசவாளர்களுக்கு உயர்த்தப்பட்ட, 300 யூனிட் இலவச மின்சாரத்துக்கு, எட்டு கோடியே, 41 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் காரணமாக, தமிழக அரசு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை, மானியமாக மின் வாரியத்துக்கு வழங்குகிறது. மேலும், விசைத்தறிகளுக்கு, மூன்று நிலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், ஒரே நிலையாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு யூனிட்டுக்கு, 70 காசு மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்படும்.
இந்த அரசாணை கடந்த, ஒரு மாதம் முன்பு வெளியாக வேண்டியது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக வெளியாகவில்லை. மேலும், அ.தி.மு.க.,வினர் இந்த அரசாணையை, வெளியிட அனுமதிக்க கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்திருந்தனர். இதனால், தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு, இன்று (நேற்று) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., சுந்தரவதனம் உள்பட பலர் உடனிருந்தனர்.