வில்லியனுார் : வில்லியனுார் அருகே, அரசு பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு பாலச்சந்தர் என்ற மகனும், மலர்விழி,16; என்ற மகளும் உள்ளனர்.
மலர்விழி, பிள்ளையார்குப்பம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மலர்விழி மொபைல் போனில் பேசினார். போன் குறித்து அவரது தாயார் விசாரித்தார்.
சற்று நேரத்தில், மலர்விழி, வீட்டின் அருகே வயலில் இருந்த கிணற்றில் குதித்தார். கிராம மக்கள் ஓடி வந்து, மலர்விழியை மீட்க முயன்றனர். ஆனால், அவர் தண்ணீரில் மூழ்கினார்.
வில்லியனுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மலர்விழி உடலை மீட்டனர். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது;
சில தினங்களுக்கு முன், மலர்விழி மொபைல் போனுக்கு 'ராங்கால்' வந்தது. அதில், பேசிய நபர், தனது பெயர் மணி, சேலம் என அறிமுகம் செய்துள்ளார். உடன் மலர்விழி, 'ராங்கால்' என இணைப்பை துண்டித்துள்ளார்.
இருப்பினும், அந்த நபர் தினமும் மாலை நேரத்தில் போன் செய்துள்ளார். இது குறித்து மலர்விழி பெற்றோரிடம் கூறியுள்ளார். உடன் அவரது சகோதரர், சேலம் நபரை போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார்.
அதற்கு அந்த நபர் ஆபாசமாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், குடும்பத்தினர் பயந்தனர்.
நேற்று மாலை மலர்விழியிடம், நடந்த சம்பவம் குறித்து அவரது தாய் கேட்டார். அதில், மனமுடைந்த மலர்விழி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
போனில் பேசிய நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.