ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாபு என்பவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, புதுமண தம்பதிக்கு முதலிரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, வீரபாபு மனைவிக்கு தெரியாமல் முதலிரவு காட்சிகளை, ரகசியமாக தன் மொபைல் போனில் 'வீடியோ' எடுத்துள்ளார். இதை, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையறிந்த பெண்ணின் பெற்றோர், வீரபாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், உள்ளூர் பஞ்சாயத்தில் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை ஏற்காத பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், புது மாப்பிள்ளை வீரபாபுவை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.
'யு - டியூப்' பார்த்து கள்ள நோட்டு அடித்தவர் கைது
மஹாராஷ்டிராவில் ஜால்கான் மாவட்டத்தில் வசிக்கும் நபர், கள்ள நோட்டு அடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரின் வீட்டில் போலீசார் நேற்று சோதனையிட்டனர்; வீட்டில், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அச்சடித்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவரை கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'யு - டியூப் வீடியோக்களை பார்த்து, கள்ள நோட்டுகளை அச்சடிக்க கற்றேன்' என தெரிவித்து உள்ளார்.
கார் ஏற்றி தாய் கொலை; 'பாசக்கார' மகன் 'வெறி'
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே அச்சன்புதுார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கரநாராயணன். இவரது மனைவி முருகம்மாள், 63. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சங்கரநாராயணன், 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் பலியானார். முருகம்மாள் இளைய மகன் உதயமூர்த்தி, 38, உடன் வசித்து வந்தார்.
மூத்த மகன் மோகன் தாயாரை கவனிக்காததால், அவருக்கு சொத்து கிடையாது என, முருகம்மாள் கூறியுள்ளார். சங்கரநாராயணன் விபத்து வழக்கில் நஷ்ட ஈடாக கிடைக்கும் தொகையையும், மோகனுக்கு தர முடியாது என, கூறிவிட்டார். நேற்று விபத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜராக, உதயமூர்த்தி தாய் முருகம்மாளுடன், 'டூ வீலரில்' திருநெல்வேலி சென்றார். பின் தொடர்ந்து காரில் வந்த மோகன், அச்சன்புதுார் சிவராமபேட்டை சாலையில், டூ வீலர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகம்மாள் நேற்று மாலை இறந்தார். உதயமூர்த்தி சிகிச்சையில் உள்ளார். இலத்துார் போலீசார், மோகன், அவருடன் காரில் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.
'செக்ஸ் டார்ச்சர்': கணவர் வெளிநாடு ஓட்டம்
கோவையைச் சேர்ந்த, 25 வயது பி.டெக்., பட்டதாரி பெண், தன் கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, இயற்கைக்கு மாறான உடலுறவு, நிர்வாண படம் எடுத்து மிரட்டுதல், மூவராக சேர்ந்து உடலுறவு கொள்ள முயற்சி போன்ற பல திடுக்கிடும் புகார்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகார்களின் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிந்துள்ள போலீசார் மீதும், அந்த பெண் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: குறிப்பிட்ட அந்த பெண், விசாரணை அதிகாரி பற்றி புகார் தெரிவித்தார். இதையடுத்து, அந்த அதிகாரியை மாற்றி, வேறு அதிகாரியை நியமித்தேன். இரண்டாவது அதிகாரி மீதும், அப்பெண் புகார் கூறினார். இதையடுத்து, அவரது குறைபாட்டை நானே நேரடியாக கேட்டேன். 'கணவர் எடுத்த நிர்வாண போட்டோக்களை அவரது போனில் இருந்து அழிக்க வேண்டும்' என்று கூறினார்.
'அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்டவுடன் முதல் வேலையாக நிர்வாண படங்களை அழிக்கிறோம். அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என, அந்த பெண்ணிடம் உறுதி அளித்தேன். 'மூன்று பேராக உடலுறவு கொள்ள முயற்சித்தனர்' என்ற புகாரை, கணவர் மற்றும் அவரது நண்பர் மீது அந்த பெண் கூறினார். அது தொடர்பான தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரிப்பதற்காக, போலீசார் முயற்சித்தனர்.
அந்த பெண் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட மூவரது மொபைல் போன் சிக்னல்களும் வெவ்வேறு இடத்தில் இருந்ததாக காட்டின. ஆதாரங்கள் எதிராக இருந்த காரணத்தால், போலீசார் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அந்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராக, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.
பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த 4 பெண்கள் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 45. அதே ஊரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 48. விவசாயிகளான இருவரும், அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கின்றனர். கடந்த 2ல் இருவரும் மது அருந்தி, தகராறு செய்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஜெயக்குமார் காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இதனால் கோபமடைந்த ஜெயக்குமாரின் மனைவி வேணி, அவரது தாய் சரசு, சகோதரி அம்சவள்ளி மற்றும் உறவினர் இருளாயி ஆகியோர் நேற்று முன்தினம், ராமுவின் வீட்டிற்கு சென்று, அவரை கட்டையால் தாக்கி கொலை செய்தனர். இதை அறியாமல், இரவு 11:00 மணிக்கு தாய் அழகரம்மாள், ராமு வீட்டுக்கு சென்றபோது, அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இளையான்குடி போலீசார் நான்கு பெண்களையும் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்; அ.தி.மு.க., கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, 2022 டிச., 26 முதல், பிப்., 21 வரை பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளி செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறிய அவர், பள்ளி செல்லாமல் ஒரு கும்பலின் பிடியில் சிக்கினார். இதையறிந்த, டீக்கடை ஒன்றில் பணியாற்றும் அந்த மாணவியின் தந்தை மற்றும் அவரது தாய், மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது, பள்ளி செல்வதாக கூறி, கும்பலால் காரில் அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு தொடர்ந்து உள்ளாக்கப்பட்டதாக கூறி, அந்த சிறுமி அழுதுள்ளார். இதையடுத்து, மாணவி யின் பெற்றோர், எஸ்.பி., தங்கதுரையிடம் புகார் அளித்தனர். அவர் மேற்கொண்ட விசாரணையில், மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அம்பலமானது. இது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் சிகாமணி, 44; நகராட்சி மூன்றா வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலரான இவர் 'ரியல் எஸ்டேட்' தொழிலும் செய்கிறார். இவரும், இவரது நண்பரான, மாதவன் நகரைச் சேர்ந்த ராஜா முகமது, 36, என்பவரும், அவ்வப்போது, தங்கள் காரில், மாணவியை, பார்த்திபனுார் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அங்கு, இவர்களுடன், பரமக்குடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த, 'மறத்தமிழர் சேனை' என்ற அமைப்பின் மாநில தலைவர், 'புதுமலர்' பிரபாகரன், 42, என்பவரும், அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்கள் இந்த நாசகார செயலில் ஈடுபட்டனர். அந்த மாணவியை இவர்களுக்கு வசப்படுத்த, சிகாமணியின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றும் கயல்விழி, 45, உமா, 34, என்ற பெண்கள் உடந்தையாக இருந்தனர்.
அவர்கள், சிறுமியிடம், 'நைசாக' பேசி, வழிக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா விசாரித்து, சிகாமணி, ராஜாமுகமது, பிரபாகரன், கயல்விழி, உமாவை நேற்று கைது செய்தார். சிகாமணி, 'புதுமலர்' பிரபாகரன், ராஜா முகமது மீது, 'போக்சோ' சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். தொடர் விசாரணையில், பரமக்குடியில் பல முக்கிய புள்ளிகள், இந்த விவகாரத்தில் சிக்குவர் எனத் தெரிகிறது.
மனைவியை கொன்ற எஸ்.ஐ., கைது
தேனி மாவட்டம், கம்பம் போக்குவரத்து போலீசில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் ஜெயகுமார், 52. இவரது மனைவி ராணி, உத்தமபாளையத்தில் உள்ளார். இந்நிலையில், கம்பம் மெட்டு காலனியைச் சேர்ந்த அமுதா, 45, என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து, பல ஆண்டுகளாக அவருடன் வசிக்கிறார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, 26 வயதில் மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் காலை, அமுதா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் பிணமாக கிடந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கம்பம் வடக்கு போலீசார், அமுதா உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதிஆனது. போலீசாரிடம் 'இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அவரின் கழுத்தை நெரித்து, மிதித்துக் கொலை செய்தேன்' என, ஜெயகுமார் கூறினார். ஜெயகுமாரை, போலீசார் கைது செய்தனர்.