வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெண் அதிகாரிகள், எதிரிகளை தாக்கும் போர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, நாட்டுக்கு சேவை செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 49 வாரம், அனைத்து விதமான போர் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் மட்டுமே, பெண் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பெண் ராணுவ பயிற்சி அதிகாரிகளின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வு, சென்னையில் நேற்று நடந்தது.
எதிரிகளை தாக்கும் பயிற்சி
போர்க்களத்தின் போது துப்பாக்கியில் குண்டு காலியான பின், கையில் வைத்திருக்கும் ஆயுத்தை வைத்து, எவ்வாறு தாக்குவது என்பது குறித்த பயிற்சியை செய்து காண்பித்தனர். வனப் பகுதியில் மறைந்து இருக்கும் எதிரியை எப்படி தாக்குவது, எதிரிகள் இருக்கும் இடத்தை எப்படி அடையாளம் காண்பிப்பது போன்ற பயிற்சியையும் நிகழ்த்தி காண்பித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் ராணுவ பயிற்சி அதிகாரி விதார்த்தி பார்தி: ராணுவ பணியில் சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் நான்தான் ராணுவ பணியில் சேரும் முதல் பெண். சட்டப் படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். அதன் பின், ராணுவத்தில் சேர தேர்வு எழுதினேன்; தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
உ.பி.,யை சேர்ந்த ராணுவ பயிற்சியாளர் கேப்டன் அபர்ணா ராய்: பயிற்சிக்கு வரும் இளம் அதிகாரிகளுக்கு, முதலில் மனம் மற்றும் உடல் தகுதியை வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இரண்டுக்கும் சமமான பங்களிப்பு செய்யப்படும்.
இதையடுத்து தற்காப்பு உட்பட, அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. நான் தொழில்நுட்ப பட்டதாரி என்பதால், 'சிக்னல்' தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறேன். போர் களத்தில் வீரர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது; உபகரணங்களை எப்படி பயன்படுத்து என்பது குறித்து, பயிற்சி அளிக்கிறேன்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ராணுவ பயிற்சி அதிகாரி ரேகா சிங்: என் கணவர் வீர்சக்ரா தீபக் சிங் ராணுவத்தில் இருந்தார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார்.
ஆசிரியராக பணியாற்றிய நான், என் கணவரைத் தொடர்ந்து ராணுவத்தில் சேர தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இங்கு பயிற்சி பெற்று வரும் நான், ஏப்ரலில் பயிற்சியை நிறைவு செய்கிறேன்.
முதலில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. என் உடல், பயிற்சிக்கு தகுதியாக இல்லை. பின், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, உடல் அளவிலும், மனதளவிலும் சிறப்பாக செயல்படும் நிலைக்கு என் திறமையை வளர்த்துள்ளேன்.
என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம், தைரியம், நம்பிக்கை எனக்கு கிடைத்துள்ளது, இதற்கு இங்கு அளித்த பயிற்சியே காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர். நடப்பு ஆண்டில் 400க்கும் அதிகமான அதிகாரிகள் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், 115 பேர் பெண்கள்.