காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரில் மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய, இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி பள்ளத்தூர் மெயின் ரோட்டில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கடையில் மர்ம நபர் ஒருவர் மண்ணெண்ணை பாட்டிலில் தீ வைத்து தூக்கி எரிந்து தப்பிவிட்டார். இதில், பணம் மற்றும் மது பாட்டில்கள் சேதமானது.
இந்நிலையில் நேற்று இரவு, மதுக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடைக்குள் தூக்கி எரிந்தார். இதில், மதுக்கடை சேல்ஸ்மேன் ஆன, இளையான்குடியை சேர்ந்த மாயழகு மகன் அர்ச்சுனன் 46 என்பவர் படுகாயமடைந்தார்.
மேலும், கடையில் இருந்த ரூ.76 ஆயிரத்து 880 பணமும், ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் எரிந்து சேதமானது. பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பள்ளத்தூர் சாத்தப்ப செட்டியார் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் ராஜேஷ் பாண்டி 21. என்பது தெரிய வந்தது.