திருச்சி:''ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழகபோலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
தமிழக போலீசாருக்கான, 62வது தடகள விளையாட்டு போட்டிகளை, திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், தமிழகபோலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று முன் தினம் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ரவுடிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொலை வழக்கு, ஆள் கடத்தல் குறைந்துள்ளது. ஜாதி, மதக்கலவரங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு, சாராய மோதல் இல்லை. சில குற்றங்கள் நடந்தாலும், அவற்றில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து விடுகிறோம். தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.
லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிதி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவற்றை நடத்தியவர்கள் துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச்சென்று பதுங்கி உள்ளனர்.
அவர்களை கைது செய்து, தமிழகத்துக்கு அழைத்து வர, இன்டர்போல உதவியை நாடி வருகிறோம். தமிழகத்தில் அனைத்து போலீசாரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை, ஓசூர் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. எனவே, அதற்கேற்ப புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
தேவையின் அடிப்படையில், திருச்சியில் புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும். விழாக்கள், பண்டிகைகள் நாட்கள் தவிர, புதிய சட்டப்படி, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில், நல்ல முன்னேற்றம் உள்ளது. வேங்கைவயல் வழக்கிலும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நல்ல முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 'வீடியோ'க்களை சமூக வலைதளங்களில் பரவி வருவது போலியானது. அவற்றை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆய்வு நடத்தியபின் நிருபர்களிடம் பேசிய சைலேந்திரபாபு “விசாரணைக் கைதிகளைதுன்புறுத்தாமல் புலன் விசாரணை நடத்த போலீசாருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது அறிவியல் பூர்வமாக விசாரணை நடக்கிறது.
''போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் உதவுகின்றனர். ரவுடிகளை கைது செய்யும் போது போலீசாரை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
''அவர்கள் மீது குறைந்த பட்ச பலப்பிரயோகம் நடத்தப்படும். சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க வேண்டியுள்ளது,” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபும் டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி., தங்கதுரை உடனிருந்தனர்.