சென்னை:குரோம்பேட்டையில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி ஒருவர், தெரு நாய் விரட்டியதில் கீழே விழுந்து காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து விட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை, எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகிவிட்டது.
ஒவ்வொரு தெருவிலும், குறைந்த பட்சம், 10 நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவை, சாலைகளில் செல்வோரை விரட்டி கடிப்பதும், விரட்டும் போது பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைவதும் தொடர் கதையாகிவிட்டது.
ஜனவரி மாதம், 25வது வார்டு, குரோம்பேட்டை, சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில், டியூஷன் முடிந்து சகோதரியுடன் வீட்டிற்கு சென்ற பிளஸ் 1 மாணவி, வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதில், கீழே விழுந்து காயமடைந்தார்.
இந்த நிலையில், 26வது வார்டு, குரோம்பேட்டை, காந்தி நகரில், சில நாட்களுக்கு முன், இரவில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய, தேன்மொழி, 55 என்ற மூதாட்டி, தெரு நாய் துரத்தியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவம், மாநகராட்சி பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் வி. சந்தானம், 85, கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சியில், இரண்டு ஆண்டுகளில் தெரு நாய் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பு இல்லை.
ஒரு வண்டியை வைத்துக்கொண்டு, ஐந்து மண்டலங்களிலும் நாய்களை பிடிப்பது சாத்தியமில்லை.
நாய் பிடிக்கும் நபர்களும் இல்லை. அதனால், முதலில், ஐந்து மண்டலங்களிலும் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதை உடனடியாக செய்தால் மட்டுமே, நாய் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.