இளையான்குடி : சிவகங்கை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கியது போல்,வறட்சியால் பாதித்த நெற்பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு ரூ. 26 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
அதனை போல் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் குறிப்பாக சாலைக்கிராமம்,சூராணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாமல் வறட்சியால் ஏராளமான விவசாயிகள் நஷ்டத்திற்குஉள்ளாகினர்.
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கியது போல்,மழை இல்லாமல் வறட்சியால் பாதித்த நெற்பயிர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தெற்குகீரனூர் விவசாயி தங்கபாண்டியன் கூறுகையில்,சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை, கல்லல், மானாமதுரை, தேவகோட்டை, காளையார்கோயில் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெற் பயிர்கள் மூழ்கியதால் தமிழக அரசு ரூ. 26 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது.
ஆனால் மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் மழை இல்லாமல் வறட்சியால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காமல் உள்ளது.ஆகவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.