சென்னை:பெரம்பூர் நகை கடையில் கொள்ளையடித்த பெங்களூரு கும்பலில் இருவரை, தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 36. இவர் தன் வீட்டின் முதல் தளத்தில், 'ஜெ.எல்., கோல்டு பேலஸ்' என்ற பெயரில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 10ம் தேதி காலை, கடையின் ஷட்டர் வெட்டி எடுக்கப்பட்டு, 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு, 4.50 கோடி ரூபாய்.
கொள்ளையர்களை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பெங்களூரில் தொட்டபெட்டா புரம் மாவட்டத்தை சேர்ந்த வெல்டர் கஜேந்திரன், 31 மற்றும் தொக்கலாபுரத்தை சேர்ந்த ஒட்டுனர் திவாகர், 28, ஆகிய இருவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும், அங்கிருந்து நேற்று காலை சென்னை அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து சென்னை மாவட்ட கூடுதல் கமிஷனர் அருண் கூறியதாவது:
கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படையினர், பல குழுக்களாக பிரிந்து, பல மாநிலங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெங்களூரை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் கங்காதரன், கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். இவர்களில் இருவரை கைது செய்துள்ளோம்.
விசாரணைக்கு பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து, பின் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.