வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு யாரும் தொந்தரவு கொடுக்கவில்லை என பீஹார் குழுவினர் கூறியுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சிலர், போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தினர். இதனால், வட மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, பீஹார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில், நான்கு அதிகாரிகள் குழுவை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தார். இந்த குழுவினர் திருப்பூர் வந்து, கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பீஹார் மாநில தொழிலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு பாலமுருகன் கூறியதாவது: நாங்கள் பீஹார் மாநில தொழிலாளர்களுடன் பேசி வருகிறோம். ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பில் உள்ளோம். வதந்திகள் மற்றும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம். வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசும், பீஹார் அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு யாரும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. தமிழக அரசு பக்கபலமாக உள்ளது.
வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்திகளை தடுப்ப குறித்தும், போலி வீடியோக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. தமிழக அரசின் நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.