வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்ற உத்தரவுப்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், வீட்டில் இம்ரான் கான் இல்லை. அங்கு, அவரது கட்சி தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
பாக்., பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான் மீது, மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப்பொருட்கள் குறித்த விவரங்களை, தேர்தலின் போது தனது சொத்துக்கணக்கில் இருந்து மறைத்ததாக இம்ரான் கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் இம்ரான் கான் ஆஜராகவில்லை. இதனால், இம்ரான் கானுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய, பாக்.,கின் பஞ்சாப் மாகாண போலீசார் விரைந்தனர். ஆனால், லாகூரில் உள்ள இல்லத்தில் இம்ரான் கான் இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை.
அதேநேரத்தில், இம்ரான் கைது குறித்து போலீசாரின் நடவடிக்கையை அறிந்த அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தொண்டர்கள் இம்ரான் கான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இம்ரான் கானை கைது செய்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.
அதேநேரத்தில், கைதுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியாக எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார், இம்ரான் கானை கைது செய்யாமல் வெறுங்கையோடு திரும்ப மாட்டோம் எனக்கூறியுள்ளனர்.