பெங்களூரு-வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே, சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவச சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்குகிறது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் துவங்கி மூன்று, நான்கு மாதங்களுக்கு பின் சீருடை, பாடப் புத்தகங்கள் கிடைக்கும். கல்வித்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் மாணவர்கள் பாதிப்படைவர்.
எனவே வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் நாளன்றே, மாணவ - மாணவியருக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்க கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே 60 சதவீதத்துக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட, கல்வித்துறை கோடவுன்களில் வைக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கும் நாளன்றே, பாட புத்தகங்கள் கிடைக்கும்.
நேரத்துக்கு சரியாக, அந்தந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.
ஒரு ஜோடி சீருடை வழங்க, டெண்டர் அழைத்து பணி உத்தரவு கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சீருடையும் குறிப்பிட்ட நாளில் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.