முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஈரோடு இடைத்தேர்தல்
முடிவு, அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
பல காரணங்களால் பொது மக்கள், தி.மு.க., அரசின் மீது மிகுந்த அதிருப்தியில்
இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறாமல், வரலாறு காணாத
படுதோல்வியை அ.தி.மு.க., அடைந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை உதறித்
தள்ளியது; பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை
துரோகங்கள் தான் இதற்கு காரணம்.
ஆளுங்கட்சியின் பண, படைபலத்துக்கு
முன்னாடி, 'டிபாசிட்'டை அ.தி.மு.க., தக்கவைத்து கொண்டதே பெரிய வெற்றி தான்
என்பதை இவர் ஏத்துக்க மாட்டாரா?
நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்துாரி அறிக்கை: வட மாநிலத்தவரை, தமிழர்கள் தாக்குகின்றனர் என்பதெல்லாம் மிகை. இது, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர்வாசி என, யாராக இருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும், அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமே அன்றி, அடித்து துரத்துவதில்லை.
நம்மை ஏமாத்தியவங்களை எல்லாம் அரியணையில ஏத்திட்டு, நமக்காக உழைக்க வந்தவங்களை அடிச்சு துரத்துவது தானே இப்ப பிரச்னையா இருக்குது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: தான் குற்றம் சாட்டிய சசிகலா வகையறாவைச் சேர்த்தால் தான் அ.தி.மு.க., வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க, பன்னீர்செல்வம்தொடர்ந்து முயன்று வருகிறார்.
இவருக்கும், இவரை சார்ந்தவர்களுக்கும், தகுதி, திறமை இருந்தால், தனிக்கட்சி துவக்கி, பழனிசாமியுடன் அரசியல் ரீதியாக மோதி பார்க்கட்டும். அதை விடுத்து தனி மனித தாக்குதலில் ஈடுபட்டால், கைகட்டி வேடிக்கை பார்க்க, அ.தி.மு.க., தொண்டர்கள் கோழைகள் அல்ல.
பன்னீர்செல்வத்தை தனிக்கட்சி துவங்குங்கன்னு அடிக்கடி சீண்டுறாரே... தப்பி தவறி, அவர் பா.ஜ.,வுல சேர்ந்துட்டா, தன்னை பழிவாங்கிடுவார்னு பயப்படுறாரோ?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் ஜாதியவாதத்திற்கும், மதவாதத்திற்கும் மக்கள் பாடம் புகட்டி இருக்கின்றனர். தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என, ஓட்டளித்துள்ளனர். தி.மு.க., - காங்கிரசை விமர்சிக்கிறோம் என்ற பெயரில், பணம் வாங்கி ஓட்டளித்தனர் என, மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது. தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தவர்கள் ஏமாளிகளோ, பணத்திற்கு விலை போனவர்களோ அல்ல.
இவர் சொல்றதை கேட்டு, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களே விலா நோக சிரிப்பாங்க!