சென்னை:சென்னையில், சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், ஹரீஷ் கைது செய்யப்பட்டார். ஆம்பூரில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை, சென்னை போலீசார் இரவோடு இரவாக 'அலேக்'காக துாக்கினர்.
சென்னையைச் சேர்ந்த, 'சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்' என்ற தனியார் அமைப்பு சார்பில், சென்னை அண்ணாபல்கலை, விவேகானந்தா அரங்கில், பிப்ரவரி, 26-ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.
இதில், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், 'யு டியூப்' பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
பட்டங்கள் மற்றும் விருதுகளை, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.
தனியார் அமைப்பு சார்பில், டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலை இடம் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பூதாகரம்
இந்நிலையில், அண்ணா பல்கலை பெயரை போலியாக பயன்படுத்தி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக, அந்த பல்கலை பதிவாளர் ரவிகுமார், இம்மாதம் முதல் தேதி, சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து, சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்
அமைப்பின் இயக்குனராக செயல்பட்ட சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஹரிஷ் மீது, மோசடி உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை தி.நகரைச் சேர்ந்த, முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் சார்பிலும், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோட்டூர்புரம் போலீசாரின் விசாரணையில், ஹரீஷ் நடத்திய டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு, முதலில் அண்ணா பல்கலை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், விழா நடத்தியவர்கள் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அதனால், ஹரீஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை துவங்கிய நிலையில், ஹரீஷ் தலைமறைவானார். இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனால், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரீஷ் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், ஹரிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், 'தன் மீது தவறு ஒன்றும் இல்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன். யாருக்கும் போலி டாக்டர் பட்டம் வழங்கவில்லை' என, பேசியிருந்தார்.
அதேநேரம், உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீசார், ஹரீஷ் வெளியிட்ட வீடியோவை வைத்து மொபைல் போன் டவர் குறித்து ஆய்வு நடத்தினர். அதில், திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சாணாங்குப்பத்தில், ஹரீஷ் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு சென்ற போலீசார், தன் நண்பரான குட்டிராஜின் மாமியார் வீட்டில், பதுங்கியிருந்த ஹரீஷையும், அவருக்கு உதவிய குட்டிராஜையும், ௨௩, கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.
விசாரணையில், போலி டாக்டர் பட்டம் வழங்கியதையும், அதற்கான விழா ஏற்பாட்டுக்காக சில முறைகேடுகள் செய்ததையும், ஹரீஷ் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
போலி அமைப்பு மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பல்கலைகளிலும், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விதிமுறைகளில் கட்டுப்பாடும், விதிகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தனியார் பல்கலைகளை பொறுத்தவரை, எந்த வரைமுறையும் இல்லாமல், தாங்கள் நினைத்தவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலைகளை தவிர, வேறு யாரும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது.
தமிழக உயர்கல்வித்துறை உரிய கமிட்டி அமைக்க வேண்டும். அதில், நிபுணர்களை உறுப்பினர்களாக நியமித்து, கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தி, அங்கீகார கமிட்டி அமைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.