மாமல்லபுரம் : தமிழக பழங்குடி இனத்தவரில், இருளர் மக்கள் குறிப்பிடத்தக்கவர்.
தமிழக வட மாவட்டங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரம், கர்நாடகம் மாநில எல்லை பகுதிகளில், இவர்கள் வசிக்கின்றனர்.
பழங்காலத்தில், வனப் பகுதிகளில் வசித்து, பாம்பு பிடித்து விஷமுறிவு மருந்து தயாரித்து, மூலிகை சேகரித்து, வாழ்வாதாரம் ஈட்டினர்.
கூடுதல் பேருந்துகள்
நாளடைவில், வனத்தில் இருந்து வெளியேறி, பிற பகுதிகளில் குடிசையில் வசிக்கின்றனர்.
அரசு, தன்னார்வ நிறுவனங்கள், நீண்டகாலம் முன் கட்டிய, தற்போது பாழடைந்த தொகுப்பு வீடுகளில், குறைவானவர்கள் வசிக்கின்றனர்.
சவுக்கு உள்ளிட்ட தோப்புகளில், மரம் வெட்டுகின்றனர். விறகு சேகரிக்கின்றனர். அரிசி ஆலை, செங்கல் சூளை, மரம் அறுப்புக்கூடம் என, கொத்தடிமை கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
இவர்களின் குலதெய்வம் கன்னியம்மன். வங்க கடலில் வீற்றுள்ளதாக நம்புகின்றனர். அவரை வழிபட, ஆண்டுதோறும், மாசிமக பவுர்ணமி நாளில், குடும்பத்தினர், உறவினர் என, குழுவினராக, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் முகாமிடுவர்.
பவுர்ணமி நாளான நாளை, கன்னியம்மனை வழிபட, மாமல்லபுரத்தில், இரண்டு நாட்களாக, இருளர்கள் குவிந்தனர். அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
செங்கல்பட்டு - மாமல்லபுரம், சிறப்பு பேருந்துகள் இயக்கி, கூடுதல் கட்டணம் வசூலிப்பர். தற்போது, வழக்கமான 25 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
பெண்கள் இலவசமாக பயணித்தனர். தனியார் பேருந்துகளில், 35 ரூபாய் வசூலித்ததாக, இருளர்கள் தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தில் குவிந்தவர்கள், கடற்கரை மணல்வெளியில், சேலை மற்றும் படுதாவில் தடுப்பு அமைத்து தங்கியுள்ளனர்.
கலைநிகழ்ச்சி
கடைகளில் மளிகை பொருட்கள், பாத்திரங்கள் வாங்கி, பகிங்ஹாம் கால்வாயில் மீன், இறால் என பிடித்து, விறகு சேகரித்து, உணவு சமைத்து உண்டு, மணற்பரப்பில் உறங்குகின்றனர்.
இன்று இரவு, தன்னார்வலர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்துவர்.
நாளை காலை, சூரியன் உதிக்கும் நேரத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரும், கடற்கரை வழிபாட்டு திடலில் அம்மனை எழுந்தருள செய்து வழிபடுவர்.
அம்மனிடம் குறிகேட்டு, வேண்டுதல் நிறைவேற்றுவர். திருமணம் நடத்துவர். குழந்தைகளுக்கு சிகை நீக்கி காது குத்துவர்.
பேரூராட்சி நிர்வாகம், குடிநீர், கழிப்பறை, கலை நிகழ்ச்சி மேடை என ஏற்பாடு செய்துள்ளது.