தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பல்லடத்தில், சாலை விபத்துகள், விபத்துகளில் உயிரிழப்புகள் அடிக்கடி நடக்கின்றன. நகரப் பகுதியில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கிராமப் பகுதிகளில் கேட்பாரற்ற நிலை உள்ளது. வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தாலும் உயர் அதிகாரிகளின் அனுமதி வரவேண்டும் என்ற காரணத்தை கூறி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்கும் நிலை உள்ளது. இதற்காக மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன. போலீசாருடன் இணைந்து உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைக்க வேண்டும்.