திருத்தணி : திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்வதற்கு கால்வாய் வசதியின்றி தண்ணீர் தேங்கி நின்றது.
இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து, 120 மீட்டர் நீளத்திற்கு கட்டும் பணிகள் நடந்தன.
அதே தெருவில் 50 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது.
பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் பணிகள் கட்டி முடிக்கப்படும்,'' என்றார்.