திருப்பூர்:''வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியானநடவடிக்கை எடுக்கவேண்டும்'' என, எம்.பி., சுப்பராயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமாநில தொழிலாளர் பிரச்னை குறித்த தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சியினர் பங்கேற்ற கூட்டம், திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நேற்று நடந்தது.எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் பல்வேறுவகை தொழில்களில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்களை, தமிழக தொழிலாளர்கள் தாக்குவதாக பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், தொழிலாளர் மத்தியில் வீண் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் உள்பட தமிழகத்தில் எந்த நகரத்திலும், வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, பீஹார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் செய்திகளை பரப்புகின்றனர்.
வடமாநிலத்தவர்கள், தொழில்முனைவோராகவும், தொழிலாளராகவும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
தொழில் வளர்ச்சியால், தமிழகத்தில் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. இங்குள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை தொழில் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை. அதனாலேயே, வடமாநில தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ள இந்த சூழலில், வடமாநில தொழிலாளர்களோடு மோதல் என்பதற்கான எந்த அடிப்படை காரணமும் இல்லை. எனவே, தொழிலாளர் மத்தியில் வதந்தி பரப்பும் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு, ஒடுக்கவேண்டும்.
இதுகுறித்து அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தொழிலாளர்களும், பொதுமக்களும் துணை நிற்கவேண்டும். தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.