கோவை:கோவை மண்டலத்திற்குட்பட்ட மின் பகிர்மானப்பகுதிகளில், மின் மீட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு பெற முடியாமல், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மண்டலத்திற்குட்பட்ட, கோவை வடக்கு, தெற்கு, மாநகர் உள்ளிட்ட பல்வேறு வட்ட அலுவலகங்களின் கீழ் உள்ள, மின் பிரிவு அலுவலகத்தின் கீழ் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளுக்கு தாழ்வழுத்த மின் இணைப்பு வேண்டி, இணையதளத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
இணையம் வாயிலாக, கட்டணமும் செலுத்தி விடுகின்றனர். ஆனால், மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான தாழ்வழுத்த மின் மீட்டர்கள், போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் மின் வாரிய அலுவலகத்திற்கு நடையாய் நடப்பதால், பழுதான மின் மீட்டர்களை சரி செய்து, தற்காலிக ஏற்பாடாக பொருத்தி வருகின்றனர்.
விரைந்து அதிக எண்ணிக்கையில் மின் மீட்டர் கொள்முதல் செய்து, விநியோகிக்க வேண்டுமென,மின்வாரிய இயக்குனர் மற்றும் தலைமைப்பொறியாளருக்கு(பொருள் மேலாண்மை பிரிவு), கோவையிலுள்ள சமூக நல அமைப்புகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள், தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றன.
இதுவரை, எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
விரைவில் வருகிறது'கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் வினோதன் கூறியதாவது:மின் இணைப்புதாரர்களுக்கு, பயன்பாட்டுக்கு ஏற்ப, சிங்கிள் பேஸ் மற்றும் த்ரீ பேஸ் என, இரு வகை மின் மீட்டர்கள் வழங்கப்படுகின்றன.மொத்தமுள்ள மின் இணைப்புகளில், சிங்கிள் பேஸ் இணைப்புகளே அதிகம். த்ரீ பேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை குறைவு. அதனால் அதற்கு தேவையான, மின் மீட்டர்கள் தேவைக்கும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ஆனால் சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான, மின்மீட்டர்கள் தேவை அதிகம் உள்ளதால், அதன் இருப்பு குறைந்து வருகிறது.குறைவதற்கேற்ப ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் 15,000 மின் மீட்டர்கள் வந்து விடும்.இவ்வாறு, வினோதன் கூறினார்.