ராசிபுரம்-ராசிபுரம் அருகே, 50 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட சிவன் கோவிலில், மக்கள், சிவனடியார்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தில், வரலாற்று சிறப்பு மிக்க, ஜெயன்கொண்டான் நாதர் சிவன் கோவில் அமைந்துள்ளது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகளால், 50 ஆண்டாக இக்கோவில் பூட்டியே கிடந்தது. இதனால் கோவிலின் பெரும்பகுதி சேதமடைந்தது.
சில தினங்களுக்கு முன் கோவிலை ஆய்வு செய்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவிலை திறந்து வழிபட அனுமதியளித்தனர். இதையடுத்து, 50 ஆண்டாக கிடந்த கோவிலை, அப்பகுதி மக்கள் நேற்று திறந்து சுத்தம் செய்தனர். இவர்களுடன் திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழு சிவனடியார்கள், 60க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
அரை நுாற்றாண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆகம விதிப்படி, ஜெயன்கொண்டான் நாதருக்கு அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டன.