ஈரோடு-உலக குடல் இரைப்பை மருத்துவர் அமைப்பு சார்பில், 'மகா குரு' விருது பெற்ற டாக்டர் கே.ஆர்.பழனிசுவாமிக்கு, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கள்ளப்பட்டியில், நேற்று பாராட்டு விழா நடந்தது.
அடாப்பாளையம் கலைஞர் அறக்கட்டளை தலைவர் சிவபாலன் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பாராட்டு கடிதத்தை, பழனிசுவாமியிடம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினர்.
பின் அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்துக்கும் குடும்ப டாக்டராக பழனிசுவாமி செயல்பட்டார். வசதி இல்லாத பல ஏழைகளுக்கும், மருத்துவ சேவை வழங்கி வருகிறார்.
இப்பகுதி மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய மருத்துவ முகாமை, டாக்டர் கே.ஆர்.பழனிசுவாமி நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நீண்ட ஆயுள் பெற, டாக்டர் கே.ஆர்.பழனிசுவாமி காரணமாக இருந்தது நன்றிக்குறியது.
கள்ளிப்பட்டிக்கு பாலம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து முயன்றார். அதனாலேயே, இங்குள்ள பாலம் விரைவாக முடிந்து பயன் தருகிறது.
இவ்வாறு பேசினார்.
டாக்டர் கே.ஆர்.பழனிசுவாமி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நான் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்தேன். அவருக்கு நினைவாற்றல் அதிகம். எவ்வளவு சிரமமான, வலியான நிலையிலும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.
அனைவரும் சரியான நேரத்தில் சரியான அளவு உணவு எடுக்க வேண்டும். நல்ல துாக்கம், உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள பழக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் நல்லசிவம், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் பாலுசாமி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி உள்ளிட்டோர் பேசினர்.