பொள்ளாச்சி:'அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று, ரேஷன் கடை பணியாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டம், பொள்ளாச்சி ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் சங்கம் கூட்ட அரங்கில் நடந்தது. கிணத்துக்கடவு கிளை செயலாளர் பெருமாள்சாமி வரவேற்றார். பொள்ளாச்சி வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஆனைமலை வட்ட செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் கோரிக்கை மனுக்களை வாசித்தனர்.
கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கனகசபாபதி பேசினர். மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன் தீர்மானம் குறித்து பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பொதுவினியோக திட்டத்தை தனித்துறையாக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களை பொது பணிநிலை திறன் அடிப்படையில் கொண்டு வந்து, மாவட்ட இணை பதிவாளர் அளவில் செயல்பட வேண்டும்.
அதேபோன்று, பொதுவினியோக திட்டத்தை செயல்படுத்தும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும், பொதுவினியோக திட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று, அனைத்து விடுமுறை நாட்களும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்கள், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதற்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு கல்வித்தகுதியை அடிப்படையாக கொள்ளாமல், விற்பனையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது.