பராமரிப்பில்லாத கழிப்பிடம்
உடுமலை பஸ்ஸ்டாண்டில், திருப்பூர் பஸ்கள் நுழையுமிடத்தில் நகராட்சி இலவச பொதுக்கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், மக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சியினர் இக்கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, குப்பைக்கழிவுகள் ரோட்டில் பறந்து குவிகிறது. நோய்களும் பரவ வாய்ப்புள்ளது.
- முத்துசெல்வி, உடுமலை.
அடையாளம் வேண்டும்
உடுமலை, எஸ்.வி.,புரம் நால்ரோட்டில், வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகன ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர். எனவே, வேகத்தடைக்கு அடையாளமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கதிரவன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பசுபதி வீதியில் தனியார் வணிக நிறுவனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளன. இதனால் மற்ற வாகன ஓட்டுனர்கள் ரோட்டில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
- பவித்ரா, உடுமலை.
நடைபாதையில் ஆக்கிரமிப்பு
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்குள் மக்கள் காத்திருக்கும் பகுதியில், நடைபாதை கடைகள் போடப்படுகின்றன. இதனால், அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- சுப்பிரமணி, உடுமலை.
முறையாக எரியவில்லை
உடுமலை, குறிச்சிக்கோட்டையிலிருந்து சின்னகுமாரபாளையம் செல்லும் ரோட்டில் மின் விளக்குகள் குறைவாக எரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின்வாரியத்தினர் கண்காணித்து மின்விளக்குகளை முழுமையாக எரியச்செய்ய வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
காற்றில் பறக்கும் பஞ்சுகள்
உடுமலை, போடிபட்டி மகளிர் திட்ட அலுவலகம் அருகே தனியார் கம்பெனியிலிருந்து துாசுபஞ்சுகள் அதிகமாக பறந்து ரோட்டிலும், குடியிருப்புகளிலும் குவிகிறது. இதனால் அப்பகுதியினருக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகிறது. இதை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.
- அருள்மொழி, போடிபட்டி.
விதிமுறை மீறும் வாகனங்கள்
உடுமலை, பஸ் ஸ்டாண்டில் விதிமுறை மீறி இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, பஸ்சுக்கு அவசரமாக செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.
- ஸ்ரீதர், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை, மலையாண்டிகவுண்டனுார் நால்ரோட்டில் வேகத்தடை இல்லாததால், இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகன ஓட்டுனர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு வேகத்தடையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும்.
- மாரிமுத்து, உடுமலை.
வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
உடுமலை, சர்தார் வீதியில் பாதாள சாக்கடை குழிகள் சீரமைக்கப்பட்டு, அடையாளம் வைக்காமல் விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்களுக்கு அபாயமாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சூர்யா, உடுமலை.