உடுமலை:கோவை - மதுரை ரயில்வே வழித்தடம் அகலப்படுத்த, 1,200 கோடி ரூபாய் அரசு செலவழித்து, மின் வழித்தடமாக்கிய பின்னும், நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், ரயில்வே வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் பாதித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் கூறியதாவது: பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலகத்தில், அந்த கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார்.
கிணத்துக்கடவு -- பொள்ளாச்சி இடையிலான 24 கி.மீ., ரயில் வழித்தடம், பாலக்காடு கோட்டத்தில் இடம் பெறுவதால், பொள்ளாச்சி எம்.பி., க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில், கோவை -- பொள்ளாச்சி -- பழநி -- மதுரை இடையிலான ரயில் வழித்தடத்தில், இப்போது நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வழித்தடத்தில் ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடத்தை அகலப்படுத்த, 1,200 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது. ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கும் பணியும் நடக்கிறது.
ஆயிரம் கோடி செலவழித்தும், பழைய ரயில்களை இயக்காததால் மக்களுக்கும் பயனில்லை; ரயில்வே துறைக்கும் வருவாய் இல்லை. எனவே, பழைய ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும்.
அதேபோன்று, பொள்ளாச்சி - -பழநி வழித்தடத்தில், கோவை - -மதுரை இடையே 'இன்டர்சிட்டி' எக்ஸ்பிரஸ் ரயிலை, காலையில் கோவையில் புறப்படும் வகையில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், பாலக்காட்டிலிருந்து 'லோகோ பைலட்' தாமதமாக வருவதால், ஒவ்வொரு வாரமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படுகிறது.
அதை உரிய நேரத்தில் இயக்குவதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, எம்.பி., தெரிவித்தார்.