புதுச்சேரி: போலீசார் மன அழுத்தத்தில் இருந்து விடு பட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மூன்று போலீசார், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் மன அழுத்தத்தை போக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பேரில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் குறைக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் காலை 7:00 முதல் 8:00 மணி வரை கோரிமேடு போலீஸ் பயிற்சி மைதானத்தில், போலீசாருக்கான யோகா பயிற்சி நடந்தது.
இதில், கிழக்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
பயிற்சி பள்ளி போலீஸ்காரர் செல்வக்குமார் யோகா பயிற்சி அளித்தார்.
இதேபோல், மாகியில் மஞ்சக்கல் படகு குழாமில் நடந்த யோகா பயிற்சி முகாமில் எஸ்.பி., ராஜசேகர வல்லட், மாகி இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் பிரியங்கா பயிற்சி அளித்தார்.