மந்தாரக்குப்பம், : தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கெங்கைகொண்டான் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில தலைவர் தங்கவேல் சிறப்பு அழைப்பளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கீழ்நிலை பணியாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓவர்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பேரூராட்சிகளில் நியமனக்குழு வரம்பிற்குட்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், பேரூராட்சிகளுக்கு இணையான வருமானம் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கெங்கைகொண்டான் பேரூராட்சி ஊழியர் கோபால் நன்றி கூறினார்.